2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்!

2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்!
இ.கார்த்திகேயன்
இ.கார்த்திகேயன்
ஆர்.எம்.முத்துராஜ்
மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள் எள்ளைச் சாப்பிட்டால் உடல் பெருக்கும். உடல் பெருத்தவர்கள் கொள்ளுவைச் சாப்பிட்டால் உடம்பு இளைக்கும் என்பதுதான் இந்தச் சொலவடையின் அர்த்தம். கடினமாக வேலை செய்பவர்கள் தினமும் உணவில் கொள்ளுவைச் சேர்த்துக்கொண்டால், எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

இதனால்தான் நம் முன்னோர் இதை உணவாகப் பயன்படுத்திவந்துள்ளனர். மானாவாரிப் பயிர்களில் அதிக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதில் கொள்ளும் ஒன்று. அதனால்தான் பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது கொள்ளு.

இதை விருதுநகர், தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் ‘கானம்’ என்று அழைக்கிறார்கள். கொள்ளின் ஒரு வகையான கறுப்புக் கொள்ளுவை மானாவாரியாகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார் விருதுநகர் மாவட்டம், பாஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்.

காரியாபட்டியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பாஞ்சார் கிராமம். பாசிப்பயறு விதைக்கப்பட்டிருந்த வயலில் களையெடுக்கும் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணனைச் சந்தித்துப் பேசினோம். “கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு கோயம்புத்தூர்ல தனியார் கம்பெனில வேலை பார்த்திட்டிருந்தேன். அப்பாதான் விவசாயம் பார்த்துட்டிருந்தார். 2009-ம் வருஷம், அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாமப் போனதும், குடும்பத்தைப் பாத்துக்கிறதுக்காக வேலையை விட்டுட்டு ஊர் திரும்பினேன். இங்கே வந்து மல்லி, மக்காச்சோளம்னு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். வழக்கமா எல்லோரும் ரசாயன உரம்தான் பயிர்களுக்குப் போடுவாங்க. அதனால, நானும் அதைத்தான் பயன்படுத்தி விவசாயம் செஞ்சுட்டிருந்தேன்.

ஒரு சமயம், கோயம்புத்தூர்ல என்கூட வேலை பார்த்த தாமோதரன்ங்கிற நண்பர், என்னைப் பார்க்க வந்தார். அவர்கிட்ட பேசிட்டு இருக்குறப்போ விவசாயத்தைப் பத்தியும் பேச்சு வந்தது. அப்போ அவர், இயற்கை விவசாயத்தைப் பத்திச் சொல்லி ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்கச் சொன்னார்.

பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, முழுசா இயற்கை விவசாயத்தோட நன்மைகளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் 2012-ம் வருஷத்துல மாட்டுக்குப்பை (எரு) பயன்படுத்தி, மக்காச்சோளம், பருத்தி, சாமை, உளுந்து, இருங்குச்சோளம்னு பயிர் பண்ண ஆரம்பிச்சேன். ரசாயனம் பயன்படுத்தினப்போ இறுகிக்கிடந்த மண், மாட்டுக்குப்பையைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும் பொலபொலனு மாறிடுச்சு. தொடர்ந்து மாட்டுக்குப்பையை நிலத்துக்கு அடிக்க, மண் நல்லா வளமாகுறதைக் கண்ணால பார்க்க முடிஞ்சது” என்ற கண்ணன் தொடர்ந்தார்...

“2015-ம் வருஷம் பசுமை விகடன்ல, விழுப்புரம் மாவட்டம் துளுக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியங்கிற விவசாயி பத்தி எழுதியிருந்தாங்க. அவர் கறுப்புக்கானம் (கறுப்புக்கொள்ளு) சாகுபடி செஞ்சிருந்தார். அதைப் படிச்ச பிறகுதான் கானம் சாகுபடி பண்ண ஆசை வந்தது.

மொத்தம் 6 ஏக்கர் மானாவாரி நிலமிருக்கு. முழுக்கக் கரிசல் மண். அதுல 2 ஏக்கர் நிலத்துல கறுப்புக்கானம் விதைச்சு அறுவடை செஞ்சுட்டு, பாசிப்பயறு விதைச்சிருக்கேன். அரை ஏக்கர் நிலத்துல உளுந்து இருக்கு. இரண்டரை ஏக்கர் நிலத்துல பருத்தி இருக்கு. மீதி ஒரு ஏக்கர் நிலத்திலயும் பாசிப்பயறு விதைச்சிருக்கேன். கறுப்புக்கானத்தை அறுவடை செஞ்சு காய வெச்சு புடைச்சு வெச்சிருக்கேன். போன வருஷம் மழையில்லாத சூழ்நிலையிலயும் ரெண்டு ஏக்கர் நிலத்துல 624 கிலோ மகசூல் கிடைச்சது” என்ற கண்ணன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மொத்த அறுவடையில 313 கிலோ கானத்தைக் கிலோ 70 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டேன். அதுமூலமா 21,910 ரூபாய் வருமானம் கிடைச்சது. கானம் பிரிச்செடுத்த பிறகு கிடைச்ச பொட்டுக்கொடிகளை ஆட்டுத்தீவனத்துக்காக விற்பனை செஞ்சது மூலமா 4 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதமுள்ள 311 கிலோவையும் இதே விலைக்குப் பேசிட்டேன். அதை விற்பனை செஞ்சா 21,770 ரூபாய் வருமானமா கிடைக்கும். ஆக மொத்தம் 47,680 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதுல எல்லாச் செலவும் சேர்த்து 10,900 ரூபாய் போக 36,780 ரூபாய் லாபமா நிக்கும்” என்றார்.

நிறைவாகப் பேசிய கண்ணன், “நல்ல மழை பெஞ்சிருந்தா 1 டன் வரை மகசூல் கிடைச்சிருக்கும். மத்தப்பயிருக்கு மானாவாரி வெள்ளாமையில் உத்தரவாதம் சொல்ல முடியாது. ஆனா, கானம் விதைச்சா மழையில்லாட்டிக் கூடக் கண்டிப்பா பாதியளவாவது மகசூல் கிடைச்சுடும். அதேமாதிரி விலையும் கிடைச்சுடும். கிராமங்கள்ல ‘கொள்ளு விதைச்சு விட்டுட்டு வந்தா அறுவடையப்போ காட்டுக்குப் போனாப் போதும்’னு சொல்வாங்க. அந்த அளவுக்குப் பராமரிப்பே தேவைப்படாத பயிர் இது. நோய்த்தாக்குதல் இருக்காது. பூச்சிகள் வராது. காத்துல இருந்து நைட்ரஜன் சத்தைக் கிரகிச்சு மண்ணையும் வளப்படுத்தும். அதனால, மானாவாரி விவசாயிகள் கானம் விதைச்சா கண்டிப்பா வருமானம் கிடைக்கும்” என்று சொன்னபடி களை எடுக்கும் பணிகயைக் கவனிக்கத் தொடங்கினார்.

தொடர்புக்கு:
கண்ணன்,
செல்போன்: 97896 51789.

Views: 255

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service