கொத்தமல்லி கீரை வளர்க்கும் முறைகள்

நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் கீரைகளில் கொத்தமல்லி கீரையும் ஒன்று. சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.

வீட்டில் வளர்க்கலாம்

கொத்தமல்லியில் 2 வகை செடிகளை காணலாம். ஒரு வகையில் தண்டு பச்சையாகவும், பூ மென்மையாகவும் இருக்கும். மற்றொரு வகையில் தண்டும், பூவும் பழுப்பு நிறத்தில் காணப்படும். கொத்தமல்லி செடியின் காயே விதையாகும். இக்காயை உடைத்தால் அதனுள் விதை இருப்பதை காணலாம். இந்த விதையே முளைத்து செடியாக வளர்கிறது. இதனாலேயே கொத்தமல்லியை விதைக்கும்போது காயை உடைத்த பின் விதைக்கிறோம்.

கொத்தமல்லி பொதுவாக 3 மாதத்தில் பூத்து காய்த்து விடும். பூத்த பின் இலைகள் முற்றி அதிக நாறாக இருப்பதால் கீரையாக உணவில் சேர்த்து கொள்ள இயலாது. நமது வீட்டிலேயே காலியாக உள்ள இடத்திலும், தொட்டிகளிலும் கொத்தமல்லியை வளர்க்கலாம்.இதற்கு காலியிடம் என்றால் அந்த இடத்தை நன்றாக கொத்தி மண்ணை லேசாக ஆக்க வேண்டும். அதாவது மண் கட்டிகள் இல்லாமல் மண்ணை சமன் செய்து கொள்ளவும். இம்மண்ணுடன் நன்றாக மக்கிய தொழு உரம், சிறிது வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் ஆகியவற்றை கலப்பது சிறந்த பலனை தரும். மண் மற்றும் மேற்சொன்ன இயற்கை உரங்களையும் கலந்து சிறிய பாத்திகளை உருவாக்க வேண்டும்.

இந்த பாத்திகளில் கொத்தமல்லி விதைகளை தூவி அதற்கு மேல் சிறிது மணல் கொண்டு மூடிவிட வேண்டும். பின்பு பூவாளியை வைத்து விதைகளை அரித்து செல்லாதவாறு தண்ணீரை தெளிக்க வேண்டும். விதை விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொத்தமல்லி செடி முளைத்துவிடும். விதைத்த மூன்றாம் நாளும், அதன் பின்பு வாரம் ஒரு முறையும் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். அவ்வப்போது தோன்றும் களைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்து விட வேண்டும். பொதுவாக வீட்டு தோட்டத்தில் கொத்தமல்லி விதைக்கும்போது எல்லா விதைகளையும் விதைக்காமல் 20 நாட்கள் இடைவெளியில் விதைகளை மீண்டும் மற்றொரு பாத்தியிலோ, தொட்டியிலோ விதைக்கலாம். இவ்வாறு செய்வதால் நம் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லி இலைகள் எப்போதும் கைவசம் இருந்து கொண்டே இருக்கும்.

சாகுபடி

நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமல காரத்தன்மை 6 முதல் 8 வரை இருக்க வேண்டும். மானாவாரியாக பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது. வெப்பநிலை சராசரியாக 20 முதல் 25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கீரைக்காக கொத்தமல்லியை பாத்திகளில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். கோ- 1, கோ- 2 மற்றும் கோ- 3, கோ(சி.ஆர்)-4 ஆகியன கொத்தமல்லி ரகங்களாகும்.

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பின்னர் இறவை பயிராக இருந்தால் பாத்திகள் அமைத்து கொள்ள வேண்டும். 10 முதல் 12 கிலோ ஹெக்டேர்(இறவைக்கு), 20 முதல் 25 கிலோ ஹெக்டேர்(மானாவாரிக்கு), கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது. ஜூன், ஜூலை, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்கள் கொத்தமல்லி பயிரிட ஏற்றவை ஆகும்.

அறுவடை

விதைத்த 30-வது நாளில் செடிகளை கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன் காயின் நிறம், பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரி சாகுபடியில் 300 முதல் 400 கிலோ விதைகள், இறவையில் 500 முதல் 600 கிலோ விதைகள் கீரையாக 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

Views: 6771

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service