மானாவாரி நிலங்களுக்கு வரப்பிரசாதம்... கடலை மகசூல் அமோகம்... விவசாயி சுகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, தென்னை ஆகியவை இவரின் முக்கிய விவசாயம். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டன. இதனால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள தனது வாழ்வு என்னாகும் என்ற கவலை சுகேந்திரனை தொற்றி கொண்டது.

கவலையை ஓரம் கட்டி வைத்தார். “அழுதுகொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு” என்ற பழமொழியை மனதில் கொண்டு அடுத்த முயற்சியில் இறங்கினார். மானாவாரி நிலமான தனது நிலத்திற்கு என்ன பயிரிடலாம் என விவசாய துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி காலத்திற்கு ஏற்ப மொச்சை, உளுந்து, தட்டாம் பயறு உள்ளிட்டவைகளை பயிரிட்டார். ஆனால் அவற்றிலும் எதிர்பார்த்த வரவு இல்லை.

மனம் தளராமல் தொடர்ந்து தனது நிலத்திற்கான பயிரை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்ட 'டி.ஜி.37.ஏ.' என்ற வகை நிலக்கடலை பயிர் வறட்சியையும், கடுமையான நோய் தாக்குதலையும் எதிர்கொண்டு வளரும் என்ற தகவலையும், அது காந்தி கிராம பல்கலை கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்து அங்கு சென்றார்.

விருதுநகர் மாவட்ட மண்ணுக்கு இது ஏற்றதா என்பதை அதிகாரிகள் அறியவேண்டி, அவருக்கு அந்த நிலக்கடலை விதைகளை வழங்கினர். சோதனைகள் தன்னை சூழ்ந்திருந்த போதிலும் முயற்சியை கைவிடாத விவசாயி சுகேந்திரன், மிகுந்த நம்பிக்கையோடு, அதனை வாங்கி பருவமழை பெய்த காலத்தில் பயிரிட்டார். தினமும் அதன் வளர்ச்சியை கவனித்து வந்தார்.

ஒருமுறை கூட அவர் தண்ணீர் பாய்ச்சவில்லை. நோய் தாக்குதல் மற்ற பயிர்களில் இருந்தபோதும் இவ்வகை கடலை பயிர்களில் நோய் தாக்கவில்லை. 108 நாட்களில் அவர் எதிர்பார்த்ததை விட பன் மடங்காக மகசூல் கிடைத்தது. அதாவது மற்றவகை நிலக்கடலைகள் ஏக்கருக்கு 22 முதல் 30 மூடைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வகை புதிய நிலக்கடலை ஏக்கருக்கு 45 மூடைகள் வரை கிடைத்தது.

சுகேந்திரன், “இப்பயிரின் தண்டுப்பகுதி தடிமனாக இருப்பதால், அதில் நீரை வாங்கி வைத்துக் கொண்டு மகசூல் தரும் வரை, அந்த நீரையே பயன்படுத்தி வளர்கிறது. தண்டுப் பகுதி திடமாக இருப்பதால் நோய்களை எதிர்த்து நிற்கிறது. மற்ற கடலை பயிர்களை கணக்கிடும்போது ஒரு ஏக்கருக்கு 28 ஆயிரம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

வழக்கமாக ஒரு புதுரகம் அறிமுகப்படுத்தப்படும்போது அதை பயிரிட எல்லா விவசாயிகளும் தயங்குவதுண்டு. ஆனால் நான் நம்பிக்கையோடு தைரியமாக விதைத்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. மானாவாரி நிலங்களுக்கு இது வரப்பிரசாதம்,” என்றார். தொடர்புக்கு 99940 65759.

Views: 2027

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by VITHYAPATHI on May 8, 2016 at 7:53am

thanks  fr the information. if you have any suggestions or idea about seasame(ellu), pls forward it. thanks.

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service