பாபட்லா நெல் ரகம் விவசாயிகளுக்கு உற்ற தோழனாகிவிட்டது. விவசாயிகள் 75 கிலோ மூடை 40 வரை மகசூலாக எடுத்துள்ளனர். பயிர் தரையோடு தரையாக கீழே சாய்வதில்லை. வியாபாரிகள் 75 கிலோ நெல்லை அரவை செய்தபோது 57 கிலோ அரிசி கிடைத்துள்ளது. அரவையில் அரிசி நுனி உடைவது கிடையாது. காவிரி, டெல்டா பகுதிகளில் பாபட்லா 5204 தொடர்ந்து சாகுபடி செய்யப்படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் மிக அதிக மகசூலினைக் கொடுத்து விவசாயிகளிடம் நல்ல மதிப்பினைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் இந்த வருடம் பாபட்லா ஒரு பணப்பயிர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வியாபாரிகள் நல்ல விலை கொடுக்கின்றனர். விவசாயிகளின் நண்பன் என்ற பெயர் பெற்ற திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சுந்தரம் பாபட்லாவில் இந்த வருடம் கண்டசிறப்பு, விவசாயிகளின் மதிப்பினைப் பெற்றுள்ளது என்கிறார்.


பாபட்லா நெல் ரகம் கிருஷ்ணகிரி பகுதியில் திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கரில் ரூ.15,418 லாபமும், சாதாரண முறையில் ரூ.9,688 லாபமும் கொடுத் துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு பாபட்லா நெல் ரகத்தில் வியாதிகள் விழுந்தாலும் அதனைக் காப்பாற்ற வழிகளை தெரிந்து வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதன் அரிசியின் தரத்தினால் நுகர்வோர்கள் விரும்புகின்றனர். ஆந்திரா விவசாயிகள் பாபட்லாவை ஜிலகரப்பொன்னி என்று அழைக்கின்றனர். ஜிலகரம் என்றால் சீரகம் என்று அர்த்தம். அரிசி சீரகத்தைப் போன்று சன்னமாக உள்ளது. பொன்னி போன்று அரிசி இருப்பதால் இதன் அரிசி சிறந்த சமைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாய இலாகா திருந்திய நெல் சாகுபடியை பிரபலப்படுத்தி வருகின்றது. இதற்காக பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடிக்கு பாபட்லா 5204 நெல் ரகத்தை தேர்ந்தெடுக்கலாம்.


பாபட்லா நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளும் பிரத்யேக பயிற்சியிலும் சேர்ந்து வெற்றிபெறலாம். சுந்தரம் முக்கியமான கருத்தினை தெரிவித்து இருக்கிறார். விவசாயிகளின் வீட்டிலேயே அதிக விலை கொடுத்து கிலோவிற்கு ரூ.21 வீதம் ரொக்கம் கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். அதே நேரத்தில் அரசாங்க நேரடி கொள்முதல் நிலையத்தில் கிலோ ரூ.13.50 வீதம் விற்பனை செய்து கூலி மற்றும் இதர செலவுகள் போக ரூ.11.50 விவசாயிக்கு கிடைத்துள்ளது. பி.பி.டி.5204 நெல் விற்பனையில் ஒரு ஏக்கருக்கு விவசாயிக்கு விலை வித்தியாசத்தில் மட்டும் ரூ.20,000 கூடுதலாகக் கிடைக்கிறது. வருங்காலத்தில் பி.பி.டி.5204 அதிக அளவு சாகுபடி செய்தாலும் 70 சதவீத நுகர்வோர்கள் சன்ன ரக அரிசியை விரும்புவதாலும், அரிசி நுனி உடையாமல் இருப்பதாலும் பி.பி.டி.5204 நெல்லிற்கு நல்ல மரியாதையும் விற்பனையும் உண்டு என்பது நிச்சயம்.

எஸ்.எஸ்.நாகராஜன்


thanks to dinamalar

LEAVE A REPLY