வாழையில் தண்டு கூன்வண்டின் தாக்குதல் 7-வது மாதத்துக்கு மேல் காணப்படும். இதனால் பூ வெளிவருவது மற்றும் காய்கள் முதிர்ச்சியடைவது தடைபட்டு, மகசூல் பாதிப்பு ஏற்படும். கூன்வண்டு புழுக்கள் ஏற்படுத்திய துளைகள் மொந்தன் ரகத்தில் வரிசையாகவும், நேந்திரன் ரகத்தில் பரவியும் காணப்படும். பொதுவாக 5 மாதங்களுக்கு குறைவான பருவத்தில் உள்ள வாழை மரத்தை இப்புழுக்கள் தாக்குவதில்லை.

கூன்வண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரத்தை நீள்வாக்கில் வெட்டிப் பார்த்தால் புழுக்கள், கூட்டுப்புழு, வண்டு, பசை போன்ற திரவம், பூச்சியின் எச்சம் ஆகியவை காணப்படும். தண்டின் உள்பாகம் அழுகி துர்நாற்றம் வீசும். நோய் தாக்கப்பட்ட மரம் காற்றில் எளிதில் ஒடிந்துவிடும்.
ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறை:
காய்ந்த இலைகளையும், இலைப் பட்டைகளையும் மரத்தில் இருந்து நீக்கி அழித்து தண்டுப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாய் மரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பக்க கன்றுகளை 30 நாளுக்கு ஒருமுறை நீக்க வேண்டும்.
கூன்வண்டு தாக்குதல் உள்ள இடங்களில் தாய் மரத்தை முழுமையாக வெட்டிவிட வேண்டும். இதனால் வண்டுகள் மறுதாம்பு வாழையை தாக்கும் வாய்ப்பு ஏற்படாது. பெண் வண்டுகள் மரத்தில் முட்டை இடாமல் தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி குளோரிபைரிபாஸ்மருந்து மற்றும் ஒரு மில்லி ஒட்டு திரவம் கலந்து, வாழைத் தண்டில் பூச வேண்டும்.
வாழைக்கு ஊசி மூலம் மருந்து:
தண்டு கூன்வண்டின் சேதாரம் அதிக அளவில் காணப்படும்போது,மானோ குரோட்டபாஸ் மருந்தினை ஊசிமூலம் வாழைத் தண்டில் செலுத்தி கட்டுப்படுத்தலாம். இம்முறையில், 150 மில்லி மானோகுரோட்டபாஸ் மருந்தை 350 மில்லி நீரில் கலந்து, வாழையின் கீழ்பகுதியில் தரை மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில், வாழைக்கு பயன்படுத்தும் ஊசி மூலம் இரண்டு அங்குல ஆழத்திற்கு கீழ் நோக்கி சாய்வாக செலுத்தி மையத்தண்டை பாதிக்காத வகையில் இரண்டு மில்லி மருந்தை செலுத்த வேண்டும். 1500 வாழைகளுக்கு 1.8 லிட்டர் மருந்தை 4.2 லிட்டர் நீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தலாம். இதனால் வாழைத் தண்டில் உள்ள புழுக்கள் மற்றும் வண்டுகள் அழிக்கப்படுகின்றன. இதற்கு குறைந்த செலவு மட்டுமே ஏற்படும்.
வாழையில் பூ வெளிவந்துவிட்ட பருவத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தக் கூடாது. ஊசி மூலம் மருந்து செலுத்துவதற்கு பதிலாக, வாழை தண்டின் மேல் பகுதியில் மருந்து தெளித்தால், மேற்பரப்பில் காணப்படும் வண்டுகளை மட்டுமே அழிக்க முடியும்.

LEAVE A REPLY