விதை பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் மூ.மு. முகம்மது காசீம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரக கலவன் பரிசோதனை செய்யப்படுகிறது. பயிர் சாகுபடிக்கு தேவையான முக்கிய இடுபொருள்களில் முதன்மையானது விதை. அந்த விதை நல்ல தரமானதாக இருந்தால்தான் மகசூல் அதிகமாக கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.


பயிர் அறுவடை முடிந்து கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களில் இருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கு தகுதியானதாக இருக்காது.


அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி கலந்தவையாக இருக்கும்.


எனவே விதைக்காக அறுவடைச் செய்யும் விதைகளை அறுவடை முடிந்தவுடன் காயவைத்து சுத்திகரிப்பு நிலையம் சென்று சுத்திப்பணி செய்ய வேண்டும். இந்த குவியலில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும் புறத்தூய்மை சோதனையின்போது தூய விதைகள், களை விதைகள், பிறதானிய விதைகள் மற்றும் உயிர்பற்ற பொருள்கள் கலந்துள்ளனவா என்று கண்டறியப்படுகிறது.


நெல், பயறுவகை, சிறுதானியம், சூரியகாந்தி, பருத்தி பயிர்களுக்கு புறத்தூய்மை 98 சதவிகிதம் இருத்தல் வேண்டும். எனவே சேமிக்கும் விதையை தூய விதையாக சேமித்தல் அவசியம் என்றார் அவர்.

LEAVE A REPLY