மதுரையில் “பசுமை கிராமம்’: வீடுகள் தோறும் பூந்தோட்டம்

0
0

மதுரை:மதுரை அருகே, வீடுகள் தோறும் பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்ட “பசுமை கிராமம்’ உள்ளது.மதுரை மாவட்டம் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்டது அடைக்கம்பட்டி. இக்கிராமம் 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. நான்காவது தலைமுறையை சேர்ந்த, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அடைக்கப்பட்டி கிராமத்திற்கு எதிரே மதுரை காமராஜ் பல்கலை உள்ளது. பின்பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது. இக்கிராம மக்கள் தங்களது சொந்த நிலத்தில் மல்லிகை, பிச்சிப்பூ, கனகாம்பரம், முல்லைப்பூ என பூக்களை விளைவிக்கின்றனர். இதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இக்கிராமத்திற்குள் நுழையும்போது பூக்களின் நறுமணம் வரவேற்கிறது.

பசுமை கிராமத்தை சேர்ந்த மணிமாலா கூறுகையில், “”இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, கிராமத்தை பசுமையாக மாற்றி முன்மாதிரியாக கொண்டு வர தீவிர முயற்சி எடுத்தனர். இதன் பயனாக வீடுகள் தோறும் பூந்தோட்டங்களை அமைத்தோம். இதனால், பூக்களுக்கு நடுவே குடியிருப்புகள் என்ற நிலை ஏற்பட்டது,” என்றார்.


பஞ்சு என்பவர் கூறுகையில், “”தற்போது கிராமம் முழுவதும் பசுமையாக மாறியுள்ளது. கடும் வறட்சியிலும் கிணற்று பாசனம் மூலம் பூக்களை விளைவிக்கிறோம். விடா முயற்சியால் அடைக்கம்பட்டி “பசுமை கிராமம்’ என்றாகி விட்டது. இதற்காக மதுரை – தேனி மெயின்ரோட்டில் “பசுமை கிராமம்’ என கிராமம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அடைக்கம்பட்டியை போல் மற்ற கிராமத்தினரும் முயற்சித்தால் பசுமை சாத்தியமாகும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here