பசு – பால் காய்ச்சல் நோய்

0
0

பால் காய்ச்சல் நோய் என்பது கறவை மாடுகளின் ரத்தத்தில் கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்து குறைபாட்டின் காரண மாக ஏற்படக்கூடிய மெட்ட பாலிக் நோயாகும். பசுவின் ரத்தத்தில் 8-12% மில்லிகிராம் என்ற அளவில் கால்சியம் இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களினால் ரத்தத்தில்இருந்து கால்சியம் 8% மி.கி. இருந்து 2% மி.கி. குறையும்போது குறைவிற்கு ஏற்ப நோயின் அறிகுறிகள் வெளிப்படும். உரிய காலத்தில் சரியான முறையில் சிகிச்சை செய்யாவிட்டால் கறவை பசு இறந்துவிடக்கூடும். ஆகவே இந் நோயினை பற்றிய விபரங்களை கால்நடை உரிமையாளர்கள் அறிந்துகொள்வது நல்லது.

காரணங்கள்:
கர்ப்பப்பையினுள் வளரும் கன்றின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படுவதால்; கன்று ஈன்ற உடன் சீம்பால், பால், சிறுநீர் மூலம் அதிக அளவு கால்சியம் சத்து வெளியேறுதல் காரணமாக; கறவை பசுவிற்கு தேவையான அளவுள்ள தீவனம் வழங்காமையின் காரணமாக. பாரத்தைராய்டு என்ற நாளமில்லா சுரப்பியின் குறைபாடுகள் காரணமாக; உணவில் உள்ள கால்சியம் சத்து ஜீரண மண்டலத்திலிருந்து ரத்தத்தில் கலப்பதில் ஏற்படக்கூடிய குறை பாட்டின் காரணமாக; உடல் எலும்பில்இருந்து போதுமான அளவு கால்சியம் சத்து கிடைக்கப்பெறாத காரணத்தால்.
நோயின் அறிகுறிகள்:
பால் காய்ச்சல் நோய் ஏற்படும்பொழுது ரத்தத்திலுள்ள கால்சியம் அளவு 8% மி.கி. இருந்து 2% மி.கி. வரை குறையக்கூடும். பெயர்தான் பால் காய்ச்சலே தவிர உடல் உஷ்ணநிலை குறைந்தே காணப்படும். ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து குறைபாட்டிற்கு ஏற்ப மூன்று நிலைகளில் அதன் அறிகுறிகள் காணப்படும்.
முதல் நிலை:
ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து 8% மி.கி. இருந்து 5% மி.கி. குறையும்போது முதல்நிலை அறிகுறிகள் காணப்படும். கறவைப்பசு பதட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்படும். நிற்க முடியாமல் தள்ளாடும். நடுங்கும். தீவனம் தின்னாது. நாக்கை வெளியே நீட்டியும் பற்களை நரநரவென கடிக்கும். உடல் உஷ்ண நிலை சரியாக இருந்தாலும் பரக்கபரக்க கண்களை விழிக்கும்.
இரண்டாம் நிலை:
ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு 5% மி.கி. இருந்து 4% மி.கி. வரை குறையும்போது இரண்டாம் நிலை அறிகுறிகள் காணப் படும். கறவை பசு நிற்க முடியாமல் நெஞ்சை கீழே வைத்து உட்கார்ந்த நிலையில் இருக்கும். தலையை நிலையாக நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருக்கும். பின்னர் கழுத்தை ஒரு பக்கமாக மடித்து வைத்துக்கொள்ளும். உடம்பு குளிர்ந்தும் உமிழ்நீர் வடிந்தும், மூக்கு உலர்ந்தும் காணப்படும். கண்கள் நீலநிறமாக காணப்படும். சாணம் மற்றும் சிறுநீர் வெளியேற்றப்படாமலும் வாலை ஆட்டாமலும் இருக்கும்.
மூன்றாம் நிலை:
ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து 3% மி.கி. இருந்து 2% மி.கி. ஆக குறையும்போது மூன்றாம் நிலை அறிகுறிகள் தென்படும். பாதிக் கப்பட்ட கறவைப்பசு பக்கவாட்டில் படுத்து கால்களை நீட்டி தலையை தரையில் சாய்த்து மயக்கநிலையில் இருக்கும். கண்களை மூடிய நிலையில் உயிர் பிரிந்ததுபோல் காணப்படும். நாடித்துடிப்பும் இதயத் துடிப்பும் மிகமிக குறைந்தும் உடல் உஷ்ணநிலையும் குறைந்து காணப்படும். வயிறு உப்புசமாக இருக்கும். இந்நிலைக்கு மேலும் சிகிச்சை செய்ய தாமதமானால் மரணம் ஏற்படக்கூடும்.
சிகிச்சை முறைகள்:
முதல்நிலை அறிகுறிகள் தெரிந்த உடனே பாதிக்கப் பட்ட கறவை பசுவை மருத்துவ பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கறவை பசுவிலிருந்து ரத்தம் மாதிரி எடுத்து கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கிரியாட்டினின், குளூக்கோஸ், கீட்டோன் போன்றவைகளின் அளவுகளை தெரிந்து கொள்ள ரத்த பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட கறவை பசுவில் காணப்படும் நோயின் அறிகுறிகளை வைத்து இதே போல அறிகுறிகளை காட்டும் பிற நோய்களில் இருந்து பிரித்தறிந்து இது பால் காய்ச்சல் நோய்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான கறவைப்பசுவின் 100 கிலோ உடல் எடையில் 8 லிட்டர் ரத்தமும் 100 மில்லி ரத்தத்தில் சரா சரியாக 10மி.கி. கால்சியம் இருக்கும். இதன் அடிப்படையில் பாதிக்கப் பட்டுள்ள கறவை பசு வெளிப்படுத்தும் அறிகுறிகளை வைத்து (முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம்நிலை) எந்த நிலை என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் தேவைப்படும் கால்சியத்தின் அளவினை கணக்கீடு செய்து கால்சியம் மருந்தினை ரத்த நாளத்தின் மூலம் உடலில் செலுத்தவேண்டும்.
பின்னர் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரத்த மாதிரியின் முடிவு பிரகாரம் தேவைப்படும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இம்மாதிரியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட கறவை பசு பால் காய்ச்சல் நோயிலிருந்து காப்பாற்றப் படுவதுடன் பால் கொடுக்கும் திறனும் குறையாமல் இருக்கும். ஒரு போதும் நாட்டு வைத்தியர், கருவூட்டாளர்கள், கால்நடை மருத்துமனையில் பணியாற்றும் ஊழியர்கள் போன்ற போலி வைத்தியர்களை அழைத்து சிகிச்சை செய்யக்கூடாது. இவர்களது தவறான சிகிச்சையின் காரணமாக கறவைப்பசு இறந்துவிடக்கூடும்.
தடுப்புமுறை:
கறவை பசு 7 மாத சினைக்காலம் முடிந்த உடன் பால் கறப்பதை நிறுத்த வேண்டும். எட்டாவது மாத சினைப்பருவத்தில் கறவை பசுவை டாக்டரது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். டாக்டரது சிபாரிசு பிரகாரம் தீவனம், வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவைகளை வழங்க வேண்டும். தேவைப்பபட்டால் ரத்தத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கிரியாட்டினின் குளூக்கோஸ், கீட்டோன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பரிசோதனை முடிவிற்கேற்ப டாக்டரது சிபாரிசு பிரகாரம் பராமரிப்பினை மேற்கொண்டால் பால்காய்ச்சல் நோய் வராமல் முழுமையாக தடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here