வறண்ட நிலத்தில் பட்டர் பீன்ஸ் சாகுபடி

0
0

தேனி அம்பாசமுத்திரம் விவசாயி சாதனை
தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுமையாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்த கருமைப் பகுதியாக, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.வைகையில் நீரோடும் மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே, இப்பகுதியில் உள்ள போர்வெல்களிலும், கிணற்றிலும் நீர் ஊற்று கிடைக்கும். மற்ற நாட்களில் இப்பகுதி போர்களும், கிணறுகளும் வறண்டு விடும். இப்பகுதி முழுவதும் ஒருபோக சாகுபடி மட்டுமே நடக்கிறது.

இங்குள்ள செம்மண் பூமியான, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் விவசாயி எ.ஜெயசீலன்,42. பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள இவர், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில், வழக்கமான மக்காச்சோளம், வெங்காயம் போன்ற தரைப்பகுதியில் நன்கு விளையக்கூடிய பயிர்களை சாகுபடி செய்தார். இதனால் கிடைத்த குறைவான வருமானம் குடும்பம் நடத்தக்கூட போதுமானதாக இல்லை. 

இதனால் வழக்கமான விவசாயிகளை போல் ஜெயசீலனும், கடன் மற்றும் வறுமையில் வாடினார். விவசாயத்துறை நிபுணர்களை தொடர்பு கொண்டு, இவர் ஆலோசனைகளை கேட்ட போது கூட அதிகாரிகள், நிபுணர்கள் பலரும், தரைப்பகுதியில் விளையக்கூடிய பயிர்களை மட்டும் சாகுபடி செய்யுங்கள். மலைப்பகுதியில் விளையும் பயிர்களை சாகுபடி செய்தால், முடியாது எனக்கூறி இவரது நம்பிக்கையை தகர்த்தனர்.

இதேபோன்ற சாகுபடி முறைகளை கையாள தொடங்கினால், வெற்றி பெற முடியாது எனக் கருதிய ஜெயசீலன், மனம் தளராமல் தொடர்ந்து மாற்றுவழிகளை தேடினார். தினமலர் நாளிதழில் வரும் விவசாய மலர் பகுதியை தொடர்ந்து படித்தார். அதில் எழுதியவர்களை தொடர்பு கொண்டு ஆலோசித்தார். 

அதன் பிறகு, கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டுமே விளையும் பட்டர்பீன்ஸ் ரகத்தை சாகுபடி செய்ய முயற்சி செய்தார். தனது நான்கு ஏக்கர் நிலத்தில் 10 சென்ட் நிலத்தை ஒதுக்கி, பல முறை சோதனை சாகுபடி செய்தார். இதில் குளிர்காலத்தில், காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள சீசன் நேரத்தில் பட்டர்பீன்ஸ் விளையும், என்ற முடிவுக்கு வந்தார்.

கொடைக்கானலில் பட்டர்பீன்ஸ் விதைகளை வாங்கி சாகுபடி செய்தார். முதல் சாகுபடியில், 60 சென்ட் கொண்ட ஒரு குழி நிலத்தில் 500 கிலோ மட்டுமே பீன்ஸ் விளைந்தது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம், 850 முதல் 900ம் கிலோ மட்டுமே பீன்ஸ் கிடைத்தது. இருந்தாலும் மனம் தளராமல், தானே சொந்தமாக விதைகளை உருவாக்கி சாகுபடி செய்தார்.

இம்முறை ஒரு ஏக்கருக்கு சராசரியாக 6300 கிலோ வரை (ஒரு குழிக்கு சராசரியாக 3500 முதல் 3800 கிலோ வரை) விளைச்சல் கிடைத்தது. பட்டர்பீன்ஸ்க்கு நல்ல விலையும் கிடைத்ததால், சாதனை விவசாயி, ஜெயசீலனுக்கு ஜாக்பாட் அடித்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வறண்ட பகுதியிலும் பட்டர்பீன்ஸ் விளைவித்து, சாதனை படைத்து வருகிறார். இவரது நிலத்தில் பட்டர்பீன்ஸ் விளைந்ததை பார்த்த மற்ற விவசாயிகள், பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்தனர். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஜெயசீலனால் மட்டுமே சாதிக்க முடிந்தது எப்படி, என அவர் கூறியதாவது:

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்து முடித்து விட வேண்டும். 80 நாட்கள் பயிரான பட்டர்பீன்ஸ் செடிகளில், நடவு செய்த 65வது நாளில் இருந்து காய்பறிக்க முடியும். தொடர்ந்து 80 நாள் வரை பறிக்கலாம். சில நேரங்களில் விளைச்சல் திறன் அதிகம் இருந்தால், கூடுதலாக ஐந்து நாட்கள் விளையும். 

நல்ல குளிர், ஈரப்பதம் நிறைந்த காற்று, தண்ணீர் வசதி, முறையான பராமரிப்பு தேவைப்படும். பீன்ஸ் செடி, பூ, தண்டு என அனைத்தும் இனிப்புச்சுவை கொண்டவை. இதனால் புழுக்கள் அதிகம் காணப்படும். இதற்கு பயந்து பூச்சி கொல்லி மருந்துகளை அடித்து விடக் கூடாது. மூலிகை, இயற்கை மருந்துகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இந்த மருந்துகளை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி, புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். ரசாயன மருந்துகளை தெளித்தால் செடிகள் வாடி விடும். ரசாயன உரங்கள் தேவைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். இதுவரை நான் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யவில்லை. இப்போது நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து வருகிறேன்.

சோதனை: இனிவரும் காலங்களில் இன்னும் அதிக விளைச்சல் எடுப்பேன். இன்னமும் பலவித மலைப்பயிர்களை விளைவிக்க சோதனை நடந்து வருகிறது. கொடைக்கானலில் விளையும் “அவகோடா’ செடிகளை சோதனை முறையில் நட்டுள்ளேன். இது காய்க்குமா என்ற முடிவுக்கு வரவே, ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும், என்றார். இவரிடம் பேசி ஆலோசனை பெற 99441 33016.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here