கூடுதல் லாபம் தரும் பயறு விதை உற்பத்தி

0
0
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பாசிப் பயறு, தட்டைப் பயறு விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்று விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை, விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் இந்த பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறுகளில் விதைப் பண்ணை பதிவு செய்து, அதிக மகசூலையும் அதன் மூலம் லாபமும் பெறத் திட்டமிடலாம்.

குறிப்பாக, பாசிப் பயறில் அறிவிக்கப்பட்ட ரகங்களான கே.எம்-2, வம்பன்-2, கோ-6 ரகங்களை சாகுபடி செய்யலாம். சான்று விதை உற்பத்தி செய்ய முதலில் விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும். உரிய படிவத்தில் மூன்று நகல்களில் விதைப்பு அறிக்கையை நிறைவு செய்து விதைப் பண்ணைக் கட்டணமாக ஓர் ஏக்கருக்கு வயலாய்வுக் கட்டணம் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.25, விதைப் பரிசோதனைக் கட்டணம் ரூ.30-ஐ செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குநர், சேலம் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பயறு வகை விதைப் பண்ணை பதிவு, விதைப்பு செய்த நாளில் இருந்து 30 முதல் 35 நாள்களுக்குள் அல்லது பூப்பதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும். விதைப் பண்ணை பதிவு விண்ணப்பத்தோடு மூல விதைக்கான சான்றட்டைகள், விதை வாங்கியதற்கான ரசீது ஆகியவை விதை ஆதாரத்திற்காக இணைக்கப்பட வேண்டும்.

பயறு வகை விதைப் பண்ணை பூப்பருவத்தின் போது ஒரு முறையும், காய்முதிர்வு நிலையில் ஒரு முறையும், விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு பயிர் விலகுதூரம், கலவன் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கிடப்பட்டு அறிக்கை வழங்கப்படும்.

விவசாயிகள் பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 10 மீட்டரும், சான்று நிலைக்கு 5 மீட்டருக்கு குறையாமல் இருக்குமாறு விதைப் பண்ணை அமைக்க வேண்டும். மேலும், விதைச்சான்று அலுவலரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, விதைப் பண்ணை பராமரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பராமரிக்கப்பட்ட விதைப் பண்ணை வயலில் அறுவடை முடிந்த உடன் சுத்தி அறிக்கை பெற வேண்டும். அறுவடை ஆய்விலிருந்து 90 நாள்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட விதையை, விதைச் சுத்தி நிலையத்துக்கு கொண்டு வந்து சான்று பணியைத் தொடரலாம் என விதைச்சான்று உதவி

இயக்குநர் வே.ராஜதுரை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here