பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துதல்!

0
0
பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. பருத்தியில் தத்துப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.

சேத அறிகுறிகள்: தத்துப் பூச்சியானது பருத்தி தவிர நிலக்கடலை, ஆமணக்கு, கத்திரி, வெண்டை போன்ற பயிர்களையும் தாக்குகிறது. இளம் மற்றும் வளர்ச்சி அடைந்த பூச்சிகள் இலைகளிலுள்ள சாற்றை உறுஞ்சுவதால், இலைகளானது சுருண்டு விடுகின்றன. மேலும் இலைகளின் ஓரங்கள் காய்ந்து, தீய்ந்ததுபோல் காணப்படுகின்றன. இதன் தாக்குதல் அதிகமாகும்போது இலைகள் காயந்து பின்னர் உதிர்ந்து விடுகின்றன.

 மேலும் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பூ மற்றும் காய் பிடிப்பது குறைகிறது. பருத்தி பஞ்சின் தரமும் குறைகிறது. இதன் தாக்குதலால் சுமார் 35 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வாழ்க்கை பருவம்: பெண் பூச்சியானது சுமார் 13 முட்டைகளை இலைகளுக்கு அடியில், இலை நரம்புகளில் இட்டுச் செல்கின்றன. முட்டைப் பருவமானது 4 முதல் 11 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து வெளியேவரும் இளம் பூச்சிகளின் பருவமானது 21 நாள்களில் முடிவடைந்து வளர்ச்சி அடைந்த பூச்சியாக மாறுகிறது. பூச்சியானது இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இவை பக்கவாட்டில் நகரும் தன்மை கொண்டது.

கட்டுப்படுத்தும் வழிகள்: ஒருகிலோ பருத்தி விதைக்கு இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூஎஸ் 5 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பயறு வகைகளை ஊடுபயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளை அதிகப்படுத்த வேண்டும். பொருளாதார சேத நிலையை தாண்டும்போது பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவு தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு இமிடாகுளோபிரிட் 200 எஸ்எல் 100 மிலி அல்லது அசிட்டமிபிரிடு 20 எஸ்பி 50 கிராம் அல்லது புரபனோபாஸ் 50 இசி 1000 மிலி அல்லது டைமீத்தோயேட் 30 இசி 600 மிலி மருந்தை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here